About Us


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி – வரலாறு

முன்னுரை
தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் நலன்களை மேம்படுத்த ஓர் தனி அமைப்பு தேவை என்ற அடிப்படையில் விடுதலை வீரர் மாஸ்டர் வா.இராமுண்ணி அவர்களால் 1946-ல் முதன்முதலில் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பே ‘சென்னை மாகாண தொடக்கப்பள்ளி ஆசிரியர் சம்மேளனம்” (The Madras Presidency Elementary School Teacher’s Federation) எனும் இயக்கமாகும்.
1949ல் மாநில அளவில் சங்கம் செயல்படுவது தடுக்கப்பட்டது. நமது இயக்கத் தலைவர்களின் கல்விச்சான்றுகள் இரத்து செய்யப்பட்டன. 1950ல் நமது நாடு குடியரசானதைத் தொடர்ந்து புதிய அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்தது. உயர்நீதிமன்றத்தில் இயக்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் வெற்றி கிட்டியது. புதிய அரசியல் சாசனத்தின்படி சங்கம் அமைத்திட அனுமதிக்கப்பட்டது.

இயக்கத்தின் மறுமலர்ச்சி :-
1957ல் நமது இயக்கம் மீண்டும் புத்துயிர் பெற்று 3வது மாநில மாநாட்டை சென்னை மெமோரியல் ஹாலில் நடத்தியது. அதில்தான் ‘சென்னை மாகாண தொடக்கப்பள்ளி ஆசிரியர் சம்மேளனம்” என்பது ‘தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி” என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இம்மாநாட்டின் வாயிலாக ஓய்வு ஊதியமே இல்லாத ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம், பணிக்கொடை மற்றும் ஆயுள் காப்பீடு என மூன்று பலன்கள் அளிக்கப்பட்டன.

முதல் ஊதிய ஆணைக்குழு – கடலூர் மாநாடு :-
1960ல் அமைக்கப்பட்ட முதல் ஊதிய ஆணைக்குழுவில் ஆசிரியர்களது ஊதியம் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லாததை அறிந்த நமது இயக்கம் 1960 ஜனவரியில் கடலூரில் 4வது மாநில மாநாட்டைக் கூட்டி கோரிக்கைகளை முன்வைத்தது. பல்லாயிரக்கணக்கில் ஆசிரியர்களைத் திரட்டி அதுவரை எந்த இயக்கங்களும் காணாத மாபெறும் பேரணியை நடத்தி வெற்றி கண்டது.இதன் பயனாக இடைநிலையாசிரியர்களுக்கு 90 – 4 – 110 – 6 – 140 எனும் ஊதிய விகிதம் பெறப்பட்டது.

இயக்கத்திற்கு பதிவு :-
இயக்கம் புதிய சட்டதிட்ட விதிகளை உருவாக்கி 1860ஆம் ஆண்டு சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு பெற்றது. பதிவு எண் : 118/61 ஆகும்.

தேசியப் பாதுகாப்பு 5வது மாநில மாநாடு:-
1962ல் இயக்கத்திற்கென திறந்த புத்தகத்தைச் சுற்றி பூமாலை, இயக்கத்தின் பெயர், வளர்க கல்வி எனும் இலச்சினையுடன் கூடிய சின்னம் உருவாக்கப்பட்டது.

1962ல் 5வது மாநில மாநாடு மதுரையில் தேசியப் பாதுகாப்பு மாநாடாக நடத்தப்பட்டதோடு, தேசியப் பாதுகாப்பிற்கு நிதியும் தரப்பட்டது. அம்மாநாட்டு கோரிக்கையை ஏற்று, 55 என இருந்த ஓய்வுபெறும் வயதை 58என உயர்த்தி அரசு ஆணையிட்டது. மேலும் கல்வி ஆண்டில் எப்போது ஓய்வுபெற்றாலும் கல்வியாண்டு முடியும் வரை பணி நீட்டிப்புச் சலுகையும் பெறப்பட்டது.

ஆசிரியர் மாணவர் விகிதம்:-
உயர்த்தப்பட்ட ஆசிரியர் மாணவர் விகிதமானது, நமது பேரியக்கத்தின் கோரிக்கையால் மீண்டும் குறைக்கப்பட்டு 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்றும், 36 மாணவர்கள் எனில் இரண்டு ஆசிரியர் பணியாற்றவும் அனுமதித்தும் அரசாணை பெறப்பட்டது.

6வது மாநில மாநாடு :-
1964ல் தஞ்சையில் நடைபெற்ற 6வது மாநில மாநாட்டில் ஆசிரியர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.50 என உறுதி செய்யப்பட்டது. மேலும், மதிய உணவு மானியம் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கி ஆணையிட்டப்பட்டது.

மாஸ்டர் அவர்கள் பணியிலிருந்தும் இயக்கப் பதவிகளிலிருந்தும் ஓய்வு :-
22 ஆண்டுகள் பொதுச்செயலாளராகப் பதவி வகித்து, ஆசிரியர் நலனுக்காகவே தம் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த தியாகி மாஸ்டர் வா. இராமுண்ணி அவர்கள் 1968ல் திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநிலத்தேர்தலின்போது பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டு புதியவர்கள் பொறுப்பிற்கு வர வழிவகுத்தார்.

இயக்க நிறுவனர் மாஸ்டருக்கு மணிவிழா – மாநாடு :-
1970 டிசம்பரில் மாஸ்டர் வா.இராமுண்ணி அவர்களுக்கு மதுரையில் மணிவிழா மாநாடு நடத்தி, நிதி அளிக்கப்பட்டது. மாநாட்டைச் சிறப்பிக்க செங்கல்பட்டு மாவட்டம் ஊத்துக்கோட்டை- யிலிருந்து மாஸ்டர் மணிவிழாச் சுடர் மிதிவண்டியில் எடுத்துச் செல்லப்பட்டது.

பழனி பொதுக்குழுவும் மறியல் போராட்டமும் :-
12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 1972 ஜனவரியில் “கல்வி எழுச்சி நாள்” நடத்தப்பட்டது. தொடர்ந்து, பழனியில் நடைபெற்ற பொதுக்குழு முடிவின்படி 1972 ஏப்ரல் 30ல் இயக்கத்தின் மாநிலப் பொறுப்பாளர்கள் மற்றும் செயற்குழுவினர் கல்வி அமைச்சர் வீட்டில் முன் மறியல் நடத்தச் சென்றனர். மறியலில் ஈடுபட்ட 19 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து 1200 பேர் கைது செய்யப்பட்டு 18 நாள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இயக்கத்தின் வெள்ளி விழா மாநாடு :-
இயக்கத்தின் 25வது ஆண்டு நிறைவு விழாவான வெள்ளிவிழா மாநாடு 1973ல் கோவையில் நடைபெற்றது. முதன்முதலில் இயக்கத்தின் கோரிக்கைகளுக்காக 1972ல் சிறையேகிய செம்மல்களுக்கு வெள்ளிப்பதக்கமும், பாராட்டுப்பத்திரமும் வழங்கப்பட்டது. இயக்கத்தின் நிறுவனர் மாஸ்டர் இராமுண்ணி அவர்கள் பங்கேற்ற கடைசி மாநாடு இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர் அவர்கள் மறைவு :-
மாஸ்டர் அவர்கள் 1975 மார்ச் 20ல் அமரரானார். அவரது மறைவு இயக்கத்திற்கு பேரிழப்பாகவும், தியாக தீபச்சுடரொளி அணைந்துவிட்டதால் ஏற்பட்ட வெற்றிடம் இயக்கத் தொண்டர்கள் மனதில் நீங்கா வடுவாகவும் அமைந்துவிட்டது.

அகில இந்திய ஆசிரியர் கூட்டணி இணைப்பு :-
1975ல் நமது பேரியக்கம் 27லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அகில இந்திய ஆசிரியர் கூட்டணியுடன் இணைந்ததின் மூலம் தேசிய நீரோட்டத்தில் இயக்கம் நீக்கமற கலந்தது.

நமது மாநில செயற்குழு 1976ல் டெல்லியில் கூடியது வரலாற்றுச் சிறப்புக்குரியதாகும். 1979 ஏப்ரலில் நமது இயக்கம் முன்னின்று அகில இந்திய ஆசிரியர் கூட்டணி வெள்ளிவிழா மாநாட்டை பார் புகழும் வண்ணம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்தியது.

இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அகில இந்திய ஆசிரியர் கூட்டணி மாநாடுகள் மூலம் இந்தியா முழுவதிலுமுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பல இடங்களை ஆசிரியர்கள்; சென்று பார்க்க வாய்ப்புகள் உருவாக்கப்பெற்று நேரடி நிதர்சனமான பார்வையில் தேசிய ஒருங்கிணைப்பினை உருவாக்கியது.

ஆசிரியர்களை அரசூழியராக்குதல்:-
அனைத்துத் தொடக்க/நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களையும் அரசுப் பணியாளர்களாக்கிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 1981 மே -4ல் மறியல் போராட்டத்தை நடத்தியதில் 7508 பேர் கைதாகி 20 நாட்கள் வெஞ்சிறையில் வாடினர். இப்போராட்டத்திற்குப் பின்னர்,
1. முதல் கட்டமாக 97,000 ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியர்கள் அரசு ஊழியராக்கப்பட்டு 01.06.81 முதல் கல்வித்துறை நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டனர்.
2. இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சிக்கென ஒரு சிறப்பு ஊதிய உயர்வு 01.06.81 முதல் பெறப்பட்டது.
3. 20 ஆண்டு பணிக்கால அடிப்படையில் சிறப்பு நிலைத்தகுதி பெறப்பட்டது.

இயக்கத்திற்கு அங்கீகாரம் :-
05.09.1981 ஆசிரியர் தினத்தன்று நமது இயக்கத்திற்கு அரசு அங்கீகாரம் அளித்து சிறப்பித்தது. அரசு அங்கீகார எண்: 1998/81 ஆகும்.

அகில உலக ஆசிரியர் அமைப்புடன் தொடர்பு :-

அகில இந்திய ஆசிரியர் கூட்டணி (AIPTF) 1981-ல் அகில உலக ஆசிரியர் அமைப்புடன் (WCOTP) இணைக்கப்பட்டதன் மூலம் நமது இயக்கத்திற்கும் அகில உலகத் தொடர்புகள் ஏற்பட்டது. 1993ல் சர்வதேச ஆசிரியர் இயக்கங்களாக செயல்பட்டுவந்த WCOTP -ம், IFFTU-ம் இணைந்து பன்னாட்டுக் கல்வி (EDUCATION INTERNATIONAL – EI ) எனும் பேரமைப்பு உருவானது.

இதன் பயனாக, தாய்லாந்து, கனடா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், டென்மார்க், ஸ்வீடன், உள்ளிட்ட நாடுகளில் செயல்பட்டுவரும் ஆசிரியர் இயக்கங்களின் அழைப்பின் பேரில் கருத்தரங்குகளில் கலந்து கொள்ளவும், அந்நாட்டு இயக்கச் செயல்பாடுகள், அலுவலக நிர்வாகம், பள்ளியில் பயிற்றுவிப்பு முறைகள் ஆகியவைகளை கண்டறியவும் வாய்ப்புகள் ஏற்பட்டன.

மிதிவண்டிப் பேரணி – மாநில கோரிக்கை பொது மாநாடு :-
1985 மே மாதத்தில் மாநில எல்லையுறு அளவில் மிதிவண்டி அணிகள் புறப்பட்டு சென்னையை அடைந்து மாபெரும் பேரணியுடன், மாநில கோரிக்கைப் பொதுமாநாடு நடத்தப்பட்டது. இதன் மூலம் மாநகராட்சி/ நகராட்சி ஆசிரியர்கள் அரசு ஊழியராக மாற்றப்பட்டு ஆணைகள் பெறப்பட்டன.

மீண்டும் ஊராட்சி ஒன்றியத்திற்கு பள்ளி ஆசிரியர்கள் :-
1985ல் ஊராட்சி ஒன்றியப் பள்ளி ஆசிரியர்களை கல்வித்துறையிலிருந்து மீண்டும் ஒன்றிய நிர்வாகத்திற்கு மாற்றப்பட்ட அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை எதிர்த்து நமது மாநில செயற்குழு தனித்துப் போராட முடிவெடுத்தது.

ஜூலை 2ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கில் ஆசிரியர்கள் மறியலில் ஈடுபட்டு கைதாகி சிறையேகினர். அரசு இயக்கத்தை அழைத்துப்பேசி ஆசிரியர்கள் கல்வித்துறை நிர்வாகத்தின்கீழ் நீடிக்க முடிவு எடுத்தது. மற்றும் மாநகராட்சி/நகராட்சிப்பள்ளி ஆசிரியர்களையும் 01.06.86 முதல் அரசு பணியாளராக்கி கல்வித்துறை நிர்வாகத்திற்கு மாற்றம் செய்து ஆணை பிறப்பித்தது.

டெல்லி நாடாளுமன்றம் முன் மறியல் – நமது பங்கு :-
1988 நவம்பரில் நாடாளுமன்றத்தின் முன் நடந்த மறியலில் நூற்றுக்கணக்கிலும், 1994 மார்ச் -ல் புதுடில்லியில் பஞ்சாயத்துராஜ் – நகர்பாலிகா சட்டங்களை எதிர்த்து நாடாளுமன்றத்தின் முன் நடந்த மறியலில் 2500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பங்குபெற்றுக் கைதானார்கள்.

நடுவணரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் கோரி போராட்டம்:-
1988 ஜூன் 2ம் தேதி முதல் 15ம் தேதி வரை உள்ளிருப்பு வேலை நிறுத்தம் நடைபெற்றது. ஜூன் 16 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் தமிழகம் முழுவதும் தொடக்கப் -பள்ளிகள் 90 சதவிகிதம் மூடப்பட்டன. இதனால் ஜூன் 19ல் அரசு இயக்கத்தைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து 01.06.88 முதல் ரூ.70/- இடைக்கால நிவாரணம் அறிவித்தது. நடுவணரசுக்கு இணையான ஊதியம் 5வது ஊதியக்குழுவில் நடைமுறைக்கு வரும் என உத்திரவாதம் அளித்தது. இவற்றை இயக்கம் ஏற்று போரட்டத்தை 21.06.88ல் முடிவுக்கு கொண்டு வந்தது.

5வது ஊதிய ஆணைக்குழுவும் பலன்களும் :-
1. இடைநிலையாசிரியர்களுக்கு மத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியம் வழங்கப்பட்டது.
2. தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தனி ஊதியவிகிதம் அனுமதிக்கப்பட்டது.
3. மொத்தப்பணிக்காலமும் தேர்வுநிலைää சிறப்பு நிலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
4. நடுநிலைப்பள்ளி பட்டதாரி தலைமை ஆசிரியரின் ஊதியம், உயர்நிலை – மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியரைவிட ரூ.240 கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டது.

இயக்க பொன்விழா மாநாடு :-
இயக்கத்தின் 50ம் ஆண்டு பொன்விழா மாநாடு 22.05.96-ல் சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. இம்மாநாட்டில் அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் தலைவர் ஜெகதீஷ் மிஸ்ரா சிறப்புப் பங்கேற்பாளராகக் கலந்து கொண்டார்.

நான்காவது உலகத் தமிழ் ஆசிரியர் மாநாடு :-
உலக அளவில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தல் பணிகளை மேம்படுத்திட, 4வது உலகத் தமிழாசிரியர் மாநாடு 1998 டிசம்பர் 3,4,5 ஆகிய நாட்களில் சென்னை பார்க் ஷெராட்டன் ஹோட்டலில் இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்டது. இதில் பன்னாட்டு தமிழ் அறிஞர்கள், தமிழகத்தின் கல்வியாளர்கள், இயக்கப் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றார்கள்.

எட்டாவது மாநில மாநாடு :-
சென்னை நேடு உள்விளையாட்டு அரங்கில் 06.12.1998ல் இயக்கத்தின் எட்டாவது பொது மாநில மாநாடும் உலகத் தமிழாசிரியர் நான்காவது மாநாடு நிறைவு விழாவும் நடைபெற்றது.

உலக அமைப்பின் மண்டல மாநாடும் பேரணியும்:-
ஏழு அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி 26.04.2000-ல் டெல்லியில் நடைபெற்ற பேரணியில் இந்தியா முழுவதிலிருந்தும் இலட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.தமிழகத்திலிருந்து 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, தென்கிழக்கு ஆசிய-பசிபிக் நாடுகள் ஆசிரியர் இயக்கங்களின் மண்டல மாநாடு புதுடெல்லியில் 27.04.2000 முதல் 29.04.2000 முடிய அசோகா ஹோட்டலில் நடைபெற்றது. இதில் இயக்கத்தின் சார்பில் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.

பேரியக்கத்தின் கல்விப்பணி:
தமிழ் வழிக்கல்விக்கு ஆதரவாக 25.01.2000ல் பெற்றோர்கள் – பொதுமக்களிடம் ஒரு லட்சம் கையொப்பம் பெற்று தமிழக முதலமைச்சர் அவர்களிடம் பொறுப்பாளர்கள் நேரில் சமர்ப்பித்து தமிழ் வழிக்கல்விக்கு இயக்கத்தின் முழு ஆதரவையும் தெரிவித்தனர்.

அனைவருக்கும் கல்வி என்ற மத்திய முடிவை நடைமுறைப்படுத்திடவும் பள்ளிக்கு வராத மாணவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்கிடவும் அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் வழிகாட்டுதலோடு, 22 மாவட்டங்கள், 300க்கும் மேற்பட்ட ஒன்றிங்கள் வழியாக பிரச்சாரப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. கோரிக்கைகளுக்காக மட்டுமல்லாமல் கல்விப் பணியாற்றுவதிலும் நாம் தான் முன்னோடிகள் என்பதை இதன்மூலம் இயக்கம் நிரூபித்துக்காட்டியது.

இயக்கச்செம்மல் ஜே.எஸ்.ஆர் மறைவு:-
இயக்கத்திற்கு சோதனைகள் வந்தபோதெல்லாம் அது தனக்கு வந்தது எனக்கருதி அல்லும் பகலும் அயராது உழைத்து தடைகளை உடைத்து இயக்கத்தை வளர்த்தெடுத்த இயக்கச்செம்மல் முன்னாள் மாநிலத்தலைவர் ஜே.எஸ்.ஆர் அவர்கள் 07.04.2001 மறைந்தார்.

உலக ஆசிரியர் அமைப்பில் முதன்முதலாக பொறுப்பு:-
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மேனாள் பொதுச்செயலாளரும், அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளருமான சு. ஈசுவரன் அவர்கள் முதன் முறையாக உலக ஆசிரியர் ஆசிரியர் அமைப்பின் செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

12 அம்சக் கோரிக்கைகளுக்காக காலவரையற்ற போராட்டம்:-
23.10.2002முதல் பறிக்கப்பட்ட சலுகைகளை மீளப்பெற 12 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஜேக்டோ-ஜியோ சார்பில் நடைபெற்ற காலவரையற்ற போராட்டத்தில் இயக்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் பங்குபெற்றார்கள். 30.10.2002 முதல் 01.11.2002 வரை நடைபெற்ற மறியலிலும் பங்குபெற்றார்கள்.

5வது உலகத் தமிழ் ஆசிரியர் மாநாடு :-
18 மற்றும் 19.12.2002 தேதிகளில் 5வது உலகத் தமிழ் ஆசிரியர் மாநாடு சென்னை லீ ராயல் மெரிடியன் ஒட்டலில் நடைபெற்றது. தமிழகத்திலிருந்து 550 பிரதிநிதிகளும் வெளிநாடுகளில் இருந்து நூற்றுக் கணக்கான பிரதிநிதிகளும் கலந்து கொண்ட இம் மாநாட்டை இயக்கம் சிறப்பாக நடத்தியது.

காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்:-
ஜேக்டோ-ஜியோ மற்றும் கோட்டோ-ஜியோ உடன் இணைந்து 02.07.2003 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்குகொண்ட 1,70,241 பேர்களை 04.07.2003-ல் பணிநீக்கம்/பணியிடை நீக்கம் செய்து அரசு ஆணையிட்டது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் முடிவில் 1,70,241 பேரில் 1,56,106 பேர்களை பணியில் சேர்த்தும், மீதமுள்ள 6,072 பேர்களுக்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழு வழங்கும் தீர்ப்பின்படி தமிழக அரசு செயல்படவேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
01.02.2004-ல் மூவரடங்கிய நீதிபதிகள் குழுவானது, 999 பேர்களது பணிநீக்கத்தை உறுதி செய்தும், மீதம் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு நிறுத்தம் உள்ளிட்ட தண்டனைகள் அளித்தும் தீர்ப்பு கூறியது. பணிநீக்கம் உறுதி செய்யப்ட்ட 999 பேர்களில் 36 பேர்கள் நமது பேரியக்கத்தைச் சேர்ந்தவர்களாவர்.
10.02.2004-ல் பணிநீக்கம் உறுதி செய்யப்ட்ட 999 பேர்களை மீளவும் பணியில் சேர்த்து தமிழக அரசு உத்தரவிட்டது.

உலக ஆசிரியர் அமைப்பில் இரண்டாம் முறையாக பொறுப்பு:-
27.07.2004-ல் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மேனாள் பொதுச் செயலாளரும், அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளருமான சு. ஈசுவரன் அவர்கள் உலக ஆசிரியர் அமைப்பின் செயற்குழு உறுப்பினராக இரண்டாம் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

6வது உலகத் தமிழ் ஆசிரியர் மாநாடு :-
19 மற்றும் 20.12.2004 தேதிகளில் 6வது உலகத் தமிழ் ஆசிரியர் மாநாடு, சென்னை லீ ராயல் மெரிடியன் ஒட்டலில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தமிழகத்திலிருந்து 500க்கும் அதிகமான பிரதிநிதிகளும் வெளிநாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

27அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றுகட்டப் போராட்டம்:-
பறிக்கப்பட்ட சலுகைகள் உள்ளிட்ட 27 அம்சக்கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தி 14.02.2005ல் வட்டாரத் தலைநகர்களிலும், 1107.2005ல் மாவட்டத் தலைநகர்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
03.09.2005ல் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ஒருநாள் தொடர்முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அரசுஅலுவலர் – ஆசிரியர் பொதுமாநாடு:-
08.02.2006-ல் அரசுஅலுவலர் – ஆசிரியர் இயக்கங்களின் பொதுமாநாட்டை சென்னை-கோயம்பேடு அங்காடித்திடலில் நமது பேரியக்கம் முன்னின்று நடத்தியதன் விளைவாக பறிக்கப்பட்ட சலுகைகளான 15நாள் சரண்விடுப்பு, கருணையடிப்படை பணிநியமனம் முதலானவை பெறப்பட்டதோடு, குடும்ப பாதுகாப்புநிதி 1.50 இலட்சமாக உயர்த்தி பெறப்பட்டது.

14அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா:-
23.08.2006-ல் 14அம்சக் கோரிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் நிறைவேற்றிட வலியுறுத்தி இயக்கத்தின் சார்பில், சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ஒருநாள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

7வது உலகத் தமிழாசிரியர் மாநாடு :-
உலக அளவில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தல் பணிகளை மேம்படுத்திடää உலகத் தமிழாசிரியர் 7வது மாநாடு 16 மற்றும் 17.12.2006 தேதிகளில் சென்னை லீ ராயல் மெரிடியன் ஒட்டலில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தமிழகத்திலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் 500க்கும் அதிகமான பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

டெல்லி பாராளுமன்றம் முன்பு மறியல்:-
26.02.2007 மற்றும் 27.02.2007 ஆகிய தேதிகளில் ஜீவாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுடெல்லி பாராளுமன்றத்தின் முன்பாக அகில இந்திய ஆசிரியர் கூட்டணி நடத்திய மறியல் போராட்டத்தில் நமது இயக்கத்தின் சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செயல்வழிக்கற்றல் முறையை எதிர்த்துப் போராட்டம்:-

10.04.2008-ல் செயல்வழிக்கற்றலை இரத்து செய்திடுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாரத் தலைநகர்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
05.07.2008-ல் செயல்வழிக்கற்றலை இரத்து செய்திடுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைநகர்களில் ஒருநாள் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

8வது உலகத் தமிழாசிரியர் மாநாடு :-
13 மற்றும் 14.12.2008 தேதிகளில் உலக அளவில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களின் கற்பித்தல் பணியை மேம்படுத்திட உலகத் தமிழாசிரியர் 8வது மாநாடு சென்னை லீ ராயல் மெரிடியன் ஒட்டலில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து 500க்கும் அதிகமான பேராளர்கள் கலந்து கொண்டனர்.

செயல்வழிக்கற்றல் முறையை எதிர்த்து கையெழுத்து இயக்கம்:-
16.02.2009-ல் செயல்வழிக்கற்;றல் முறையை இரத்து செய்திடக்கோரி ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களிடம் கையொப்பம் பெற்று அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

இடைநிலையாசிரியர் ஊதியப்பாதிப்பு – போராட்டங்கள்:-

01.07.2009ல் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் தமிழ்நாட்டு இடைநிலையாசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வட்டாரத்தலைநகர்களில் நமது பேரியக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

09.07.2009ல் நமது மாநிலப் பொறுப்பாளர்கள் கல்வித்துறை செயலாளரைச் சந்தித்து இடைநிலையாசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதியப்பாதிப்பை களைந்திடக்கோரி முறையிட்டனர்.

29.09.2009-ல் ஒருநபர்க்குழுவிடம் திருத்திய ஊதியக்குழு பரிந்துரைகளில் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தொகுத்து அளித்தது.

14.10.2009-ல் ஒருநபர்க்குழுவானது நமது இயக்கத்தை அழைத்து 29.09.2009ல் அளிக்கப்பட்ட அறிக்கையின் மீதான கருத்துக்களை கேட்டறிந்தது.

உலக ஆசிரியர் அமைப்பின் துணைத்தலைவராகப் பொறுப்பேற்றல்:-
01.12.2009-ல் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மேனாள் பொதுச் செயலாளரும், அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளருமான சு. ஈசுவரன் அவர்கள் உலக ஆசிரியர் அமைப்பின் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு குக்கிராமத்தில் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றிய ஒருவர் உலக ஆசிரியர் அமைப்பின் துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது தமிழகத்தில் வாழும் தமிழர்களுக்கு மட்டும் அல்லாமல் உலகெங்கிலும் வாழும் தமிழ் இனத்திற்கே பெருமையாகும்.

கல்விப்பணி மேம்பாட்டுத்திட்டப் பயிற்சிமனை:-
09.01.2010 முதல் 12.01.2010 முடிய கனடா நாட்டு ஆசிரியர் அமைப்பின் உதவியுடன் கல்விப்பணி மேம்பாட்டுத்திட்டத்திற்கான பயிற்சியாளர்களுக்கான பயிற்சியானதுää சென்னை மாஸ்டர் மாளிகையில் நடைபெற்றது. இம்மாநாட்டை தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் தொடங்கி வைத்தார். அனைவருக்கும் கல்வித்திட்ட இயக்குநர் அவர்கள் நிறைவு விழாவில் பங்கேற்றார்கள்.

பேரியக்கத்தின் வைரவிழா மாநாடு:-
03.05.2010-ல் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நம் பேரியக்கத்தின் வைரவிழா மாநாட்டில் பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று 78, பெல்சு சாலையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஜே.எஸ்.ஆர் மாளிகையைத் திறந்து வைத்தார்.

அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் சு. ஈசுவரன் அவர்கள் ஜே.எஸ்.ஆர் உருவச்சிலையைத் திறந்து வைத்தும், தலைவர் திரு. இராம்பால் சிங் அவர்கள் எஸ்மா-டெஸ்மா தியாகிகளுக்கு தாமிரப்பட்டயம் அணிவித்தும் சிறப்பித்தனர்.

ஊதியப்பாதிப்பைக் களைந்திட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்:-
05.08.2010-ல் திருத்திய ஊதியக்குழு பரிந்துரைகளில் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் களைந்திடும் வண்ணம் உரிய பரிந்துரைகளை ஒருநபர்க்குழுவானது வழங்கிட வேண்டுமென வலியுறுத்தி வட்டார/நகரத்தலைநகர்களில் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊதியப்பாதிப்பு – டிட்டோஜேக் – போராட்டங்கள்:-
19.09.2010-ல் மாவட்டத் தலைநகர்களில் டிட்டோஜேக் சார்பில் ஆர்ப்பாட்டம்.
24.10.2010-ல் சென்னையில் டிட்டோஜேக் சார்பில் இலட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்ற பேரணி.
20.11.2010-ல் மாவட்டத் தலைநகர்களில் டிட்டோஜேக் சார்பில் ஒருநாள் உண்ணாவிரதம்.
27.12.2010 முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தொடர் மறியல்.
06.10.2011-ல் முதல்வருடன் சந்திப்பு – இடைநிலையாசிரியர்களுக்கு ரூ.750/- தனி ஊதியம் அனுமதி.

இடைநிலையாசிரியர் ஊதியப்பாதிப்பு – ஆர்ப்பாட்டம்:-

19.02.2011-ல் மத்திய அரசுக்கு இணையான இடைநிலை ஆசிரியர் ஊதியம் வழங்கிடக்கோரி சென்னை மெமோரியல் ஹால் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

உலக ஆசிரியர் அமைப்பின் துணைத்தலைவராக மீளவும் பொறுப்பேற்றல்:-

22.07.2011முதல் 26.07.2011 வரை தென்னாப்பிரிக்காவிலுள்ள கேப்டவுன் -ல் நடைபெற்ற உலக ஆசிரியர் அமைப்பின் 6வது மாநாட்டில் அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் சு. ஈசுவரன் அவர்கள் உலக ஆசிரியர் அமைப்பின் துணைத்தலைவராக இரண்டாம் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

9வது உலகத் தமிழாசிரியர் மாநாடு :-
08.09.2011 முதல் 10.09.2011 முடிய, உலகத் தமிழாசிரியர் 9வது மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் நமது பேரியக்கத்தின் சார்பில் 50 பேராளர்கள் கலந்து கொண்டனர்.

இயக்க நிறுவனர் மாஸ்டர் இராமுண்ணியின் நூற்றாண்டு நிறைவு விழா:-
21.04.2012-ல் நமது பேரியக்கத்தின் நிறுவனர் மாஸ்டர் இராமுண்ணி அவர்களது நூற்றாண்டு நிறைவு விழா சென்னை-வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

ஊதியப்பாதிப்பு – ஆர்ப்பாட்டம்:-
13.06.2012-ல் மத்திய அரசுக்கு இணையான இடைநிலை ஆசிரியர் ஊதியம் உள்ளிட்ட 7அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி வட்டாரத் தலைநகர்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊதியப்பாதிப்பு – போராட்ட ஆயத்தக் கூட்டங்களும் பேரணியும்:-
15.10.2012 முதல் 18.11.2012 முடிய 7அம்சக்கோரிக்கைகளை விளக்கி போராட்ட ஆயத்தக் கூட்டங்கள் மாவட்டத் தலைநகரங்களில் நடத்தப்பட்டன.
22.11.2012-ல் 7அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் பேரணி நடத்தப்பட்டது.

ஊதியப்பாதிப்பு – தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்:-
05.01.2013-ல் 7அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி மாவட்டத் தலைநகர்களில் நடைபெற்ற ஒருநாள் தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து கலந்து கொண்டனர்.

டெல்லி பாராளுமன்றம் முன்பு மறியல்:-
04.04.2013-ல் ஏழு அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி புதுடெல்லி பாராளுமன்றத்தின் முன்பாக அகில இந்திய ஆசிரியர் கூட்டணி நடத்திய மறியல் போராட்டத்தில் நமது இயக்கத்தின் சார்பில் 1500க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

10வது உலகத் தமிழாசிரியர் மாநாடு :-

03.06.2013 முதல் 05.06.2013 முடிய 10வது உலகத் தமிழாசிரியர் மாநாடு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் நமது பேரியக்கத்தின் சார்பில் 87 பேராளர்கள் கலந்து கொண்டனர்.

போராட்ட ஆயத்தக் கூட்டங்கள்:-
06.08.2013 முதல் 25.08.2013 முடிய 7அம்சக்கோரிக்கைகளைநிறைவேற்றிட வலியுறுத்தி தொடர் மறியல் போராட்டம் நடத்துவது குறித்த ஆயத்தக்கூட்டங்கள் மாவட்டத்தலைநகரங்களில் நடத்தப்பட்டது.

7அம்சக்கோரிக்கைகளைநிறைவேற்றிட வலியுறுத்தி தொடர் மறியல் போராட்டம்:-
25.09.2013 முதல் 28.09.2013 முடிய சென்னை கோட்டை முன்பாக மத்திய அரசுக்கு இணையான இடைநிலை ஆசிரியர் ஊதியம் உள்ளிட்ட 7அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி பேரியக்கம் சார்பில் நடைபெற்ற தொடர் மறியல் போராட்டத்தில் 15000 க்கும் மேற்பட்டோர் கைதானார்கள்.

தொடர்ந்து 7 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி 25.02.2014 அன்று ஒருநாள் உள்ளிருப்பு போராட்டமும், 26.02.2014 அன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டமும் நடைபெற்றது. இப்போராட்டங்களில் தமிழகம் முழுவதும் சுமார் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இயக்க உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

NEWS headlines

Read more

Federation activities

Read more